என் அப்பா ஒரு பொறியியலாளர், அதனால் அப்பாவின் வேலை இடமாற்றங்களுக்கு ஏற்ப குடும்பமாகவே இடமாறித்திரிந்தோம். இதனால் யாழிலிருந்து எனது ஒரு வயதில் முதலில் சென்ற இடம் கல்முனை.
அங்கு அப்பாவுக்காக ஒதுக்கப்பட்ட வதிவிடம் மிக மிக பெரியது. ஆனால் அந்த வீட்டை பற்றியதல்ல இந்தப்பதிவு. அந்த வீட்டோடு நின்ற பம்மி மரமும் அதன் பூவும்தான். அந்த மரத்தில் அப்படியோர் ஈர்ப்பு எனக்கு.
பெரிய உயரமான மரம். ஆனால் தேசிப்பழம் அளவு பந்து போன்ற மஞ்சள் நிற அழகான பூ. சிறு வயது முதலே விரும்பிய அந்த மரத்தை மட்டக்களப்பு, திருகோணமலை என்று இடமாறிச்சென்ற இடங்களில் காணக்கிடைக்கவில்லை. பின்பு மீணடும் கல்முனைக்கு சென்ற வேளையில் பம்மி பூவைப் பார்த்தது மட்டும்தான்.
பின்பு நீண்ட காலத்துக்குப் பின்னர் இணையத்தில் இந்தப் பூவைப் பற்றி தேடத்தொடங்கினேன். அந்தப் பெயரில் கிடைக்கவில்லை ஆனால் மஞ்சள் நிறப் பூக்கள் என்று தேடி படங்கள் வழியாக ஒருவாறு பூவைக்கண்டுபிடித்த்துப் பாராத்தால் அதன் பெயர் கடம்ப மலர்.
கீழ் வரும் தரவு விக்கிபீடியாவிலிருந்து பெறப்பட்டது. நன்றி விக்கிப்பீடியா.
கடம்பு என்பது (Neolamarckia cadamba மற்றும் Anthocephalus indicus, Anthocephalus Cadamba)[1] தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மாறாப் பசுமையான, வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[2] இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டடத்தேவைகளுக்கான மரம் மற்றும் காகித தயாரிப்பிற்காகவும் வளர்க்கப்படுகிறது.[2][3]
இந்திய மதங்கள் மற்றும் புராணங்களில் கடம்பு பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன.
கடம்பமரம் முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.
சங்கப்பாடல் குறிப்புகள்
- கடம்பு புலவர் போற்றும் மரம்.[8]
- நீர்வளப் பகுதியில் கடம்பு செழித்து வளரும்.[9]
- அருவி ஆடிய மகளிரில் ஒருத்தி கடம்பமரத்தைப் பற்றிக்கொள்ள மற்றவர்கள் அவளது கையைப் பற்றிக்கொண்டு நீராடினர்.[10]
- கடம்பின் மலர்க்கொத்து உருண்டு இருக்கும் [11]
- கடம்பு காடைப் பறவை போல் பூக்கும்.[12]
- தெய்வம் முருகப்பெருமானைக் கடம்பமர் நெடுவேள் என்பர்.[13][14][15][16][17],[18]
- முருகன் திருவிழாவின்போது கடம்ப மரத்தில் கொடி கட்டுவர். கடம்பு கொடி யாத்து, கண்ணி சூடி, (முருகயர்வர்).[19]
- முருகனுக்குக் கடம்பின் இலைகளால் தொடுத்த மாலை போடுவர். கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - புறம் 23-3
- கடம்பன் என்னும் சொல் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நால்வகை முதுகுடிகளில் ஒன்று.[20]
- வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் கடப்பமலர் அணிந்திருப்பான்.[21]
- குறமகள் முருகாற்றுப்படுக்கும் இடங்களில் ஒன்று [22]
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாரன் பகைவனின் கடம்ப-மரத்தை வெட்டி முரசு செய்துகொண்டான்.[23]
- களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் கடம்பின் பெருவாயில் நன்னனை அதித்தான்.[24]
- ஆலமரம், கடம்பு, ஆற்றுநடுத் தீவு (திருவரங்கம்), (இருங்)குன்றம் ஆகிய இடங்களில் திருமால் குடிகொண்டுள்ளான்.
கடம்ப மரமும், மதுரையும்
முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[26] இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மருதத்துறை என்பதே மருவி மதுரை ஆயிற்று.