வாழ்க்கையில் பல விடயங்களை நாம் ஒவ்வொருவரும் பார்க்கின்றோம், கேட்கின்றோம். ஆனால் ஒருவருக்கு தோன்றுவது போல இன்னொருவருக்குத் தோன்றாது. ஒரு விடயம் பற்றிய ஒவ்வொருவரின் பார்வைகளும் வேறு வேறு.... பொதுவாக பூட்டுக்கள் சாவிகளை நாம் எல்லோருமே பயன்படுத்தியிருப்போம், இல்லாவிட்டால் பார்த்துத்தன்னும்
இருப்போம்... இதில் என்ன விடயமென்றால் இவற்றைப் பற்றி கவிஞர், பாடலாசிரியர் பழநிபாரதியின் கற்பனையோ அற்புதமாயிருக்கு...
சாவிகள்
இல்லாத காலம்
முன்பின்
அறிமுகம் இல்லாதவரிடம்
சிகரெட்டுக்கு
நெருப்பு மாற்றிக் கொள்ளும்
மனோலயம்
சாவிகள் மாற்றிக்கொள்வதில்
வருமா
சாவிகள்
இல்லாத காலத்தில்
வாழ்ந்தவர்கள்
பாக்கியசாலிகள்
சாவிகளோடு
வாழ்ந்து வாழ்ந்து
நம்பிக்கையற்ற நமது காலம்
இன்று பரிதவிக்கிறது
பூட்டுக்கள் நிறைந்த உலகத்தில்
சாவிகளின் இடத்தை
சொல்லாமலே
செத்துப் போயினர் சிலர்
தேடுவதே
வாழ்கையாயிற்று
அடுத்த தலைமுறைக்கு
சில சாவிகள்
கைப்பற்றப்பட்டன
பிறது மெல்லத் தொடங்கிற்று
கள்ளச் சாவிகளின் காலம்
சொந்தச் சாவிகளை
உணரும் திறனிழந்து
ஏமாற்றப்பட்ட பூட்டுக்கள்
எல்லாச் சாவிகளுக்கும்
பழகிப் போயின
மரபுக் கூறுகள்
எல்லாம் அழிந்தும்
அவையும் வாழ்ந்தன
பூட்டுக்களாகவே
குழந்தைகள் சுமந்து
அலுத்த பெண்கள்
சாவிகள் சுமப்பதில்
சுகங்கள் கண்டனர்
ஒவ்வொரு மனிதனின்
ஆள்காட்டி விரலுக்கும்
சாவிக் கொத்துகள்
அணிகலனாயின
சாவியை
யார் வைத்துக் கொள்வதென
வீடுகள் தோறும்
சர்ச்சைகள் நடந்தன
பூட்டுக்கள் மௌனமாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தன.
ஒருவருக்கொருவர்
சொல்லிக் கொள்ளாமலேயே
தனித்தனிச் சாவிகள்
அவரவர் செய்தனர்
சாவிகள் கூட்டம்
பெருகப் பெருக
எந்தச் சாவி
எதற்குரியதென
அடையாளங்கள்
தகர்ந்து போயின
நல்ல சாவிகளும்
நமது தவறால்
கள்ளச் சாவிகளாய்த்
தோற்றம் காட்டின
சந்தேகங்களும்
நம்பிக்கையின்மையும்
நாய்கள் வளர்க்க
மனிதரைத் தூண்டின
நாய்கள் மீதும்
ஐயங்கள் தோன்றின
மனிதர்களின் சத்தத்தில்
நாய்கள் விழித்தன
நாய்களின் சத்தத்தில்
மனிதர்கள் விழித்தனர்
பூட்டும் சாவியும்
மனிதரைப் பூட்டின.